அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்து கொண்ட பாஜக நடத்திய நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்து மதக் கடவுளர்கள் குறித்து யாராவது ஏதேனும் பேசினால் கூட வரிந்துகட்டிக்கொண்டு போகும் பாஜகவே இப்படி செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், பாஜகவும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
வெளிநாடுகளை சேர்ந்த பாடி பில்டிங் பெண்கள், உள்ளூர் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
'பாடி பில்டிங்' ஷோ என்பதால் பெண்கள் டூ பீஸ் உடைகளை மட்டுமே அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சூழலில், அந்நிகழ்ச்சி மேடையில் இந்துக் கடவுள் அனுமனின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான தகவல் அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தெரியவரவே, அவர்கள் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு கூட்டமாக வந்தனர். பின்னர், நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறிய காங்கிரஸார், அங்கு கங்கை நதி தீர்த்தத்தை தெளித்தனர். மேலும், அனுமன் கட் அவுட்டுக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடத்திய பாஜகவினருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த அனுமன் கட் அவுட்டை காங்கிரஸார் கொண்டு சென்றனர். அவர்களை அங்கிருந்த பாஜகவினர் தடுக்க முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதால் பொதுமக்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.