முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி அங்கு தொடர்ந்து பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து இதற்குமேல் அங்கு கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இந் நிலையில் 21.09.2022 நேற்று தாம் அங்கு சென்றபோது அங்கு காட்டுமானப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோர் முறைப்பாடுசெய்துள்ளனர்.
மேலும் அங்கு கட்டுமானத்திற்குத் தயாரான நிலையில் சிமேந்து கலவை செய்யப்பட்டிருந்தமை, கட்டுமானப் பணிகள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் அங்கு காணப்பட்டமை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானப்பணிக்கான கருவிகள் அங்கு காணப்பட்டமை தொடர்பிலும் இந்தமுறைப்பாட்டில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.