ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்துறை 3 பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் தாக்கல் செய்யும். கவர்னர் அதில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து துணைவேந்தரை நியமிப்பார்.
அவர் அந்த 3 பேர் பெயரையும் நிராகரித்து வேறு ஒரு துணைவேந்தரை தேர்ந்தெடுக்க உத்தரவிட்டால் மீண்டும் 3 பேர் கொண்ட பட்டியலை அந்த குழு பரிந்துரை செய்யும். அதில் இருந்து ஒருவரை கவர்னர் தேர்ந்தெடுத்து துணைவேந்தரை நியமிப்பார். கவர்னர் ஒப்புதல் இல்லாமல் துணைவேந்தரை தேர்ந்தெடுக்க முடியாது. இதுதான் தமிழ்நாட்டில் நடைமுறையாக உள்ளது.
இப்போது துணவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் நேற்று சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
குஜராத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நடைமுறையை சுட்டிக்காட்டி அதே நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற உள்ளதாக அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த இந்த மசோதா ஏன் கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விரிவாக விளக்கம் அளித்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
அதன் பிறகு சட்டசபையில் இருந்த உறுப்பினர்களை கொண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை சட்டத்துறை மூலம் கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலையில் மசோதாவின் கோப்புகள் சட்டசபை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அதை சரி பார்த்து வருகிறார்கள்.
இதுபற்றி சட்டத்துறையில் கேட்டபோது இந்த மசோதாவை இன்று கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தனர்.
துணைவேந்தர்களை கவர்னரே நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து மாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் வழங்கும் இந்த சட்ட மசோதாவை அவரது ஒப்புதலுக்கே அனுப்புவது குறிப்பிடத்தக்கது.