தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் 8 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனவே, இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
இந்தப் போரில் புதினும், ரஷியாவும் தோல்வியடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். உக்ரைன் மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பு செயலாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் புச்சா நகரை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது போரோடியங்காவில் ரஷிய தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக வாக்களிக்க எங்களின் பல நட்பு நாடுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் மக்களை வெளியேற்ற உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது என வெளியுறவுக் கொள்கை தலைவர் பரெல் தெரிவித்துள்ளார்.