நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் நேற்று அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர்.
ஆனால் இன்று காலை முதல் மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவகங்கள், வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அரச ,தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவார் எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.