நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச ஊழியர்கள் 5 வருடங்களுக்கு வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையினை கல்வி அமைச்சில் பணிபுரியும் இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த டி.சிரிரஜீவன் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனூடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சுமையிலிருந்து 5 வருடங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதோடு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கும் இது உதவியாக அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சம்பளமற்ற இந்த 5 வருட விடுமுறையின் காரணமாக அரச ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் சேவை மூப்பு முதலானவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அவர்கள் மீண்டும் சேவையில் இணையும் போது அவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றுத் தரமல்லாத அரச ஊழியர்களுக்கு இந்த சலுகையை வழங்குமாறும், அரசு முன்னின்று வெளிநாடுகளுடன் ஒப்பதந்தங்களை மேற்கொண்டு தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.