மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி. க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர் .எஸ் .பாரதி, கே .ஆர். என் ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் , விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் காலியாகும். இதனால் நாடு முழுவதும் 57 எம்.பி.க்களின் இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
ஒவ்வொரு மாநிலங்களவை எம்,பி தேர்வாவதற்கும் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிடுகிறது. 18 எம்எல்ஏக்கள் கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் தர்மர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம், சி.வி. சண்முகம், தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
