அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் அருகில் பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி குடியாத்தம் அரச பணிமனை அரச பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தேவிகாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற பழ வியாபாரி திடீரென சர்வீஸ் சாலையில் பழ வியாபாரம் செய்யும் நீதிமானை சாலையின் எதிர்ப்பக்கமாக நிறுத்தி அரச பேருந்தை வழிமறித்தார்.
இதனால் அரச பேருந்து ஓட்டுனர், பழ வியாபாரி மோகனை சாலையிலிருந்து வண்டியை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த மோகன் பேருந்து ஓட்டுனர் யுவராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது வாக்குவாதம் முற்றி போகவே மோகன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து அரச பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், நிலைகுலைந்து போன ஓட்டுநரை மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காவலர்கள் வருவதற்குள் பழ வியாபாரி மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அரச பேருந்து ஓட்டுனர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய பழ வியாபாரி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.