உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு அவசர அவசரமாக வெளியேறுவதற்காக லிவிவ் நகர ரயில்நிலையத்தில் கவலையுடன் காத்திருக்கும் பொதுமக்களின் மத்தியில் இளம்பெண் ஒருவரின் பியானோ மெல்லிசை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின், டைட்டானிக் திரைப்படத்தின் கப்பல் மூழ்கும் இறுதிக்காட்சிகளில், அந்த கப்பலில் பயணித்த இசைக்குழு ஒன்று வாழ்க்கையின் இறுதிநிமிடங்களில் கூட மனிதனுக்கு நம்பிக்கையை தெளிக்கும் மெல்லிசை இசைத்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற செய்திருந்தார்.
அதைப்போன்றே தற்போது நிஜத்திலும் அத்தகைய நம்பிக்கை ஊட்டும் காட்சிகள் உக்ரைனில் போர் பதற்றத்திற்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது அதிகாரப்பூர்வமான தாக்குதலை அறிவித்து அந்தநாட்டின் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி சுமார் 1.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகதிகளாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதைப்போன்ற பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, உயிர் தப்பிப்பிழைத்து ஓடுவதற்காக லிவிவ் நகரின் ரயில்நிலையத்தில் குவிந்த குழப்பமும், பயமும் நிறைந்த மக்கள் மத்தியில் இளம்பெண் ஒருவர் பியானோ இசைக்கருவி மூலம் “What a Wonderful World.”என்ற மெல்லிசையை இசைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தகைய போர் பதற்றம் நிறைந்த குழப்பமான, உயிர் தப்பிப்பிழைக்கும் சூழ்நிலையிலும், இந்த இளம் பெண்ணின் இசைக்கச்சேரி அங்குள்ள மக்களின் வாழ்வியல் நம்பிக்கையில் புத்துயிர்ப்பு வழங்கி, கண்களில் சொட்ட வைத்துள்ளது.
மேலும் இளம்பெண்ணின் இந்த இசை கச்சேரி சமூகவலைத்தளங்களில் பரவி 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.