இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ரன்களில் யாரிடம் விக்கெட்டை பறிகொடுப்பார் என்பதை ஸ்ருதி என்ற ட்விட்டர் கணக்கில் சரியாக கணிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியின் தொடங்கியது.
கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும், அவர் சதம் அடித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரிஷப் பந்த் அதிரடியால் முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.
மயங்க் அகர்வால் (33), ரோகித் சர்மா (29), விஹாரி (58), கோலி (45), பந்த் (96), ஸ்ரேயாஸ் அயர் (27) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கோலி சதம் அடிக்காமல் மீண்டும் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
இதனிடையே, shruti #100 என்ற ட்விட்டர் கணக்கில் மார்ச் 4ம் திகதி 12:46 AM-க்கு கோலி அடிக்க இருக்கும் ரன் குறித்து கணித்து பதிவிடப்பட்டிருந்தது.
அதில், கோலி தனது 100வது டெஸ்டில் சதம் அடிக்கமாட்டார். அவர் 100 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களில் எம்புல்தெனியாவிடம் போல்டாவார், அதிர்ச்சியடைந்தது போல் அதிருப்தியில் தலை குனிந்த படி செல்வார் என கூறப்பட்டிருந்தது.
அதே போல், தனது 100வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் கோலி 45 ரன்களில் எம்புல்தெனியாவிடம் போல்டாகி தலை குனிந்த படி மைதானத்தை வெளியேறினார்.
வியக்க வைக்கும் வகையில் கோலி குறித்து shruti #100 என்ற ட்விட்டர் கணக்கில் சரியாக கணிக்கப்பட்டது இணையத்தில் வைரலாகியுள்ளது.