உக்ரைனில் போரின் காரணமாக பதுங்கு குழியில் வாழ்ந்து வரும் தங்களது மகனை மீட்கக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள வானவில் நகர் 2வது குறுக்கு சந்தில் வசித்து வருபவர் தனியார் வங்கி ஊழியர் பாபு. இவரது மனைவி ஜெயபாரதி, வேளாண்மை துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு பரத்யோகேஷ் என்ற மகனும் தேவிபிரியா என்ற மகளும் உள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரினால் பல்வேறு நாடுகள் பரிதவித்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து படிக்கச் சென்ற மாணவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இதன்படி திருவண்ணாமலையைச் சேர்ந்த பரத் யோகேஷ் கடந்த நவம்பர் 26ம் தேதி உக்ரைன் தலைநகர் கார்கியூவில் உள்ள Govt.Kharkiv National Medical University ல் மருத்துவப் படிப்பிற்காக சென்று தனியார் விடுதியில் தங்கி மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
தற்பொழுது கடந்த 23-ம் தேதி முதல் அவர் வசித்து வரும் பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் செய்வதறியாது பரத்யோகேஷ் உள்ளிட்ட தமிழக மற்றும் இந்திய மாணவ மாணவிகள் தனியார் விடுதியின் பதுங்கு குழியில் பதுங்கி பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய அவரது பெற்றோர்கள், கடந்த 5 தினங்களுக்கு மேலாக தனது மகன் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் தனியார் விடுதியின் பதுங்குகுழியில் தங்கியிருப்பதாகவும் தங்களால் அவனை தொடர்பு கொள்ள முடியாமல் தினந்தோறும் தவித்து வருவதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர், தண்ணீர் உணவின்றி தவித்து வரும் தனது மகன் மிகுந்த வேதனையுடன் பயத்துடனும் பதுங்குகுழியில் வாழ்ந்து வருவதாகவும், எந்த நேரமும் வெடி சத்தம் மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாததால் தங்களால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.
இந்நிலையில் அந்த நாட்டில் தங்களது மகனின் சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்று தெரியாமல் தாங்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறோம்.
இருட்டான பகுதியில் உள்ள பதுங்குகுழியில் இந்திய நாட்டைச் சேர்ந்த 600 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் தாங்கள் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக தனது மகன் கூறுவது தங்களுக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என கண்ணீருடன் கூறும் அவர்கள் தமிழக முதல்வர் உடனடியாக தங்கள் மகன் மட்டுமின்றி அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.அதேசமயம் தனியார் விடுதியின் சார்பில் ஒரு வேளை உணவு அளிப்பது மட்டுமே உண்டு தங்கள் மகன் உயிர் வாழ்ந்து வருவதாகவும் உடனடியாக அவர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தங்கள் மகனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறினர்.