உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிப்பவர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். உக்ரைனில் ஏராளமான தமிழக மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் தங்களை மீட்கும்படி காணொலி வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசும் தனி கட்டுப்பாட்டு மையத்தை அமைத் துள்ளது.
இந்த மையத்தை தொடர்பு கொள்ளும் மாணவர்களை தைரியமாக இருக்கும்படி கூறி மீண்டு வருவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.
நேற்று 219 இந்தியர்கள் ருமேனியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நேற்று டெல்லி வந்தடைந் தனர். இன்று அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5 தமிழக மாணவர்கள் மற்றும் 15 கேரள மாணவ- மாணவிகள் இன்று காலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். கேரள மாணவ- மாணவிகளை அந்த மாநில அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றார்கள்.
தமிழக மாணவர்கள் 5 பேரையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஹரிஹரசுதன்- திருவல்லிக்கேணி
2. ஜாகீர் உசேன்- குரோம் பேட்டை
3. சாந்தனு- சேலம்
4. வைஷ்ணவி- தேனி
5. செல்வபிரியா- அறந்தாங்கி.
தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்வதற்காக பெற்றோர்களும், உறவினர்களும் விமான நிலையத்தில் காத்து இருந்தனர். தங்கள் பிள்ளைகளை பார்த்ததும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த மாணவர் ஹரிஹர சுதனின் பெற்றோர் செழியன்- சாந்தகுமாரி. கடந்த 2 தினங்களாக தமிழக அரசு அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு தைரியம் அளித்து வந்ததாகவும், தங்கள் பிள்ளைகளை மீட்ட மத்திய- மாநில அரசுகளுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தனர்.
மாணவர் ஹரிஹரசுதன் கூறும்போது, ‘போர் தொடங்கியதும் பயத்தில் நடுங்கிப் போனோம். விமானங்களின் இறைச்சல், வெடிகுண்டு சத்தம் கேட்டு மிகவும் நடுங்கினோம்.
சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ருமேனியாவுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றோம். அப்போது இணையதளம், செல்போன் சேவை எதுவும் கிடைக்காததால் எங்களுக்கு யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பிஸ்கெட் பாக்கெட் நமது ஊர் விலைக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்து வாங்கி சாப்பிட்டோம்.
ருமேனியா சென்று நமது விமானத்தில் ஏறிய பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது என்றார்.