இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு, உதவிகளை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம், தமிழக மாநில அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, (Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (31-03-2022) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிர் காக்கும் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் அனுமதி வழங்குமாறு, மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இலங்கை − இந்திய மீனவ பிரச்சினைக்கான தீர்வு மற்றும் கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பிலும் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமரிடம் கோரியுள்ளார்.