பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய்வ் பிராந்தியத்தில் இருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
இதன்படி ரஸ்ய இராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகள் பெலாரஸ{க்குள் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஸ்ய தரப்பு இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.கிய்வ் பிரதேசத்தில் பெருமளவு ரஸ்ய படையினரை உக்ரைன் படையினர் சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் கருங்கடல் பிரதேச முற்றுகையின் மூலம் ரஸ்யா உக்ரைனை சர்வதேச கடல் வர்த்தகத்தில் இருந்து துண்டித்துவிட்டதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறீயுள்ளது.
அத்துடன், ரஸ்யா, தனது படையெடுப்பை கிழக்கில் மீண்டும் குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது
இதற்கிடையில் எறிகனை தாக்குதல்களால் அழிக்கப்பட்ட மூலோபாய துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களை, ரஸ்யா வலுக்கட்டாயமாக இடம் மாற்றியுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி 40,000 பேர் உக்ரைனில் இருந்து ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு கிய்வ் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளதாக உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஸ்சுக் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயற்பாடானது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.