உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவதுமாக சரணடையும் வேண்டும் என ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்கி வருகின்றனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாக சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலைக்குள் மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ராணுவத்தினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் இல்லையேல் மிக தீவிரமான தாக்குதலை சந்திக்க வேண்டும் என்று வெளிப்படையாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
ஆனால் சரணடைவதற்கு உக்ரைன் அரசு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து, மரியுபோல் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்ற ரஷ்யாவின் சலுகையையும் மறுத்துவிட்டது.
மேலும் உக்ரைனின் மரியுபோல் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் டாங்கிகள் ராணுவ வாகனங்கள் என அனைத்தின் மீதும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் தீவிர எதிர்ப்பு தாக்குதல் தொடங்கியுள்ளனர்.
வெளியுறவுக் கொள்கை மையத்தின் இயக்குநர் லூக் காஃபி இந்த எதிர்ப்பு தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரத்தை அவரது ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு, இவர்கள் மரியுபோல் நகரின் பாதுகாவலர்கள் மற்றும் முழுமையான ஹீரோக்கள், இவர்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.