உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த சுப்பிரமணியன்பாளையம் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ், உக்ரைனில் விமானவியல் படித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு ரஷ்ய- உக்ரைன் போர் உக்கிரமடைந்த சூழலில், பொதுமக்கள் ராணுவத்தில் இணையலாம் என அந்நாட்டு அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று, அந்நாட்டு ராணுவத்தில் சாய்நிகேஷ் இணைந்தார்.
இதுகுறித்து மத்திய, மாநில உளவுத்துறை அமைப்புகள் சாய்நிகேஷின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவர் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்ததும் உயரம் குறைவு காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் போனதும் தெரியவந்தது.
எனவேதான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக சாய்நிகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சாய்நிகேஷ் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தூதரக அதிகாரிகள் தங்களை பொறுமை காக்குமாறு கூறியுள்ளதாகவும் சாய்நிகேஷின் தந்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.