14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ஓட்டங்களிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகினர். இதையடுத்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் சேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் திரட்டினர். ஜேம்ஸ் ரீவ் 95 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கிரிஷ் டக்-அவுட்டாகி ஷாக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே விக்கெட் சரிந்ததால் பதற்றத்துடன் தொடங்கியது இந்திய அணி.
அடுத்து களமிறங்கிய ஷேக் ரசீத் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். அவரை அடுத்து களமிறங்கிய நிஷாந்த், அவர் பங்கிற்கு 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.