ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வரும் நிலையில், கீவ் நகரை விட்டு தான் ஒருபோதும் செல்லப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் (Russian President Putin )நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததையடுத்து நேற்று காலை முதல் அங்கு போர் தொடங்கிய நிலையில் உலக நாட்டுகள் அச்சத்தில் உள்ளன.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வெளியிட்டுள்ள காணொளியில்,
“ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா என்னை முதல் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர்.
நான் கீவ் நகரத்திலேயே இருப்பேன். எனது குடும்பத்தினரும் உக்ரைனில் தான் இருக்கிறார்கள். ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வரும் நிலையில், நான் உக்ரைனின் தலைநகரை விட்டு செல்ல மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.