உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு உக்ரைனில் உள்ள போர் மண்டலத்தில் உள்ள யுக்ரேனிய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு புடின் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ரஸ்யாவின் படையெடுப்பு "ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் ஆரம்பமாக இருக்கலாம்" என்று யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நள்ளிரவு வேளையில் உரையாற்றிய அவர், ரஸ்யா தாக்குதல் நடத்தினால், "நாங்கள் நம்மை தற்காத்துக்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கிழக்கு யுக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகள், உக்ரேனியப் படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க ரஸ்யாவிடம் உதவி கேட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியிருந்தது.
இதனையடுத்து இந்தக் கோரிக்கை ரஸ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கான சாக்குப்போக்காக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேநேரம் ஒரு பெரிய அளவிலான படையெடுப்பிற்கு ரஸ்யா, இப்போது இராணுவ ரீதியாக முழுமையாக தயாராகிவிட்டதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் யுக்ரெய்ன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் ரஸ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, யுக்ரெய்ன் தலைநகர் கீவ் பகுதியில் 5 அல்லது 6 பாரிய வெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.