வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!" எனக் குறிப்பிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் சிறப்புமிகு வெற்றி சாத்தியமானது.
நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாக இருந்தாலும் கூட்டணியினரின் ஒற்றுமை என்பது தேர்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவும், அதனையும் உள்ளடக்கிய பாச உணர்வாகவும் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வருவதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடர் வெற்றியைப் பெறுவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான்.'நான்' என்று சொல்லுவதை விட 'நாம்' என்று சொல்வதே நன்மை பயக்கும். அதனால்தான், இது எனது அரசு என்று சொல்லாமல், 'நமது அரசு' என்று சொல்லி வருகிறேன். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்பதை முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் சொல்லி வருகிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் அரசாக இருக்கும் என்றும், அனைத்து மக்களின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி வருகிறேன். அப்படித்தான் இந்த ஒன்பது மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி.
அத்தகைய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும். எங்களை நம்பி மக்கள் ஆட்சியைக் கொடுத்தார்கள், அத்தகைய மக்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அதனை மக்களும் உணர்ந்து அங்கீகாரம் தந்துவிட்டார்கள் என்பதன் அடையாளம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாகும்.