தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதனை தொடர்ந்து ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் பணிகள் முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏற்றபட்டு முதற்கட்டமாக பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது.
2ஆம் கட்டமாக கடந்த 8ஆம் தேதி தேர்தல் பார்வையாளர், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த இடங்களில் தேர்தல் இருக்காது. இரண்டாம் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, இன்று (நேற்று) 3ஆம் கட்டமாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒதுக்கீடு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையங்களில் கழிப்பிட வசதிகள், அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளிலும் வாக்கும் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிகள் குறித்து, மாவட்ட எஸ்.பி. மற்றும் மாநகராட்சி ஆணையரால் ஆய்வு செய்யப்பட்டது. வேட்பாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு தேவையான வசதிகள் செய்து வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், தேர்தல் நடத்தும அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சாருஸ்ரீ, வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.