பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம் திகதி) அநுராதபுரத்தில் நடைபெறுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர்கள், எம்.பிகள் கட்சி அமைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக முதலாவது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்புகள்,கொவிட் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள். மின்சார நெருக்கடிக்கான தீர்வு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்ட இருப்பதாகவும் கட்சி தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பசில், விரைவாக தேர்தல் நடத்துவதையே பொதுஜன பெரமுன எதிர்பார்க்கிறது , எந்த நிமிடமும் தேர்தல் நடத்துவதையே தானும் விரும்புவதாக குறிப்பிட்ட அவர் கொரோனா தொற்று காரணமாக தேர்தல் செயற்பாடுகள் பின்போடப்பட்டாலும் மீண்டும் அதனை ஆரம்பிக்கும் வகையில் நாடுமுழுவதும் பிரசார கூட்டங்களை நடத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலையோ பொதுத் தேர்தலையோ அவசரமாக நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை கடந்த அரசு குழப்பி வைத்துள்ளதால் அந்த தேர்தலையும் நடத்த இயலாது. உள்ளூராட்சி தேர்தலை மாத்திரம் தான் நடத்த முடியும். ஒரு வருடத்தினால் உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்துவதையே நாம் விரும்புகிறோம். எமது கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் நடத்துவதையே விரும்புகிறார்.பாராளுமன்ற தேர்தலை இரண்டரை வருடங்கள் வரை நடத்த முடியாது. ஜனாதிபதி தேர்தலையும் முன்கூட்டி நடத்த இயலாது என்றும் அவர் தெரிவித்தார்