ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இறுதிநாளில் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரப்பப்படாத பதவி மற்றும் பதவி ராஜினாமா, இறப்பு போன்ற காரணத்தால் காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இறப்பு, ராஜினாமா உள்பட பல்வேறு காரணங்களால் 27 பதவிகள் காலியாக உள்ளது. இந்த 27 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு எண் 5, ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 4, பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 10, முகாசிபுலவன்பாளையம், சங்கராபாளையம், கூடக்கரை, கருக்குபாளையம் ஆகிய 4 இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 20 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் தேர்தலில் போட்டியிட 43 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும், 27 பதவிகளுக்கு 82 ஆயிரத்து, 171 பேர் வாக்களிக்க உள்ளனர்.