கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை ரஷ்யா உடன் பகிர்ந்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014 ஆம் ஆண்டு ரஷியா ஆக்கிரமித்து அப்பகுதியை தனது நாட்டுடன் சட்டவிரோதமாக இணைந்துக்கொண்டுள்ளது.
அதன்பின்னர் உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என அந்த மாகாணங்களில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத குழுக்கள் உருவானது. உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு ரஷியா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து பிரிவினைவாத குழுக்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். 'டிரோன்கள்’ மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டது.
பிரிவினைவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.