கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. அந்நாட்டில் 2010ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே (83) வெற்றி பெற்று அதிபரானார்.
தொடர்ந்து அதிபராக இருந்த அவர், 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவரது ஆட்சி காலத்தில், அலுமினிய தாது பொருட்கள் ஏற்றுமதியால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் கோனாக்ரியில் துப்பாக்கி முனையில் அதிபர் ஆல்பா காண்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கர்னல் மமாடி டம்போயா, அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தார். அதிபர் ஆல்பா காண்டே சிறைவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.