கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் சோயாமீல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து கடந்த சில வாரங்களில் 7,500 டன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாமீலை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு மூத்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சோயாமீல் விலை உள்நாட்டு சந்தையில் கடந்த சில மாதங்களாக பன்மடங்காக உயா்ந்து வருகிறது. ரூ. 35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சோயாமீல், ரூ. 100 வரை உயா்ந்தது. இதன் காரணமாக, கறிக் கோழி விலை கடுமையாக உயா்ந்து, விற்பனையும் சரிந்தது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணை நிறுவன உரிமையாளா்கள், சோயாமீல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சோயாமீல் இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) ஒப்புதலுக்குப் பிறகு 12 லட்சம் டன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாமீல் இறக்குமதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி அளித்தது. அதன் பிறகு, டிஜிஎஃப்டி-யும் இதுதொடா்பான அறிவிக்கையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி பிறப்பித்தது. அதன் மூலம், வா்த்தகா்கள் சாா்பில் முதல் கட்டமாக 7,500 டன் சோயாமீல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வா்த்தகா்கள் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து கடந்த சில வாரங்களில் 7,500 டன் மரபணு மாற்ற சோயாமீல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசம், பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கூடுதலாக 4.5 லட்சம் டன் மரபணு மாற்ற சோயாமீல் இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் உத்தரவுகளையும் இந்திய வா்த்தகா்கள் பிறப்பித்திருக்கின்றனா்.
இந்த 4.5 லட்சம் டன் கொள்முதல் உத்தரவில், 1.25 லட்சம் டன் வங்கதேசத்திலிருந்தும், 75,000 டன் பிரேசலில் இருந்தும், மீதம் அமெரிக்காவிலிருந்தும் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உள்ளூா் சந்தையில் சோயாமீல் விலை உயா்வை கட்டுப்படுத்த இந்த இறக்குமதி உதவும் என நம்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இருந்தபோதும், ‘சோயாமீல் இறக்குமதிக்கான அனுமதி அக்டோபா் 31-ஆம் தேதி வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், 12 லட்சம் டன் மரபணு மாற்ற சோயாமீல் இறக்குமதி இலக்கை எட்டுவது மிகவும் கடினம்’ என்று கோழிப்பண்ணை நிறுவன நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.