இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள்ளார் ‘தங்க மகள்’ அவனி லெகாரா.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாராலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இவருக்கு ராஜஸ்தான் அரசு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா, மாற்றுத்திறனாளிகளுக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் எஸ்யுவி காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா. துப்பாக்கி சுடுதலில் ஏற்கனவே தங்கம் என்ற நிலையில் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். 50 மீட்டர் ரைபிள் பிரிவில் 445. 9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார் அவனி . டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தகுதிச்சுற்றில் 2ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.