ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்களும், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் வெளியேறியவண்ணம் உள்ளனர். அவர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அந்த விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காபூல் நகரில் இன்று மீண்டும் குண்டு வெடித்த சத்தம் கேட்டது. ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரு வீடு சேதமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்ததால், இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா என்பது தெரியவந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தை நோக்கி வெடிகுண்டுகளுடன் புறப்படவிருந்த ஒரு கார் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த கார் வெடித்து சிதறியதுடன், அதில் இருந்த வெடிகுண்டுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், சிலர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. பாதிப்பு குறித்து அமெரிக்கா கணக்கெடுத்துவருகிறது.
இந்த தாக்குதலை தலிபான் செய்தித் தொடர்பாளரும் உறுதி செயதுள்ளார். விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த கார் குண்டு அழிக்கப்பட்டதாகவும், ட்ரோன் மூலம் வீசப்பட்ட இரண்டாவது குண்டு அருகில் உள்ள வீட்டில் விழுந்ததாகவும் தலிபான் அமைப்பு கூறி உளள்து.
விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.