சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பார்க்கையில் மாணவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததுடன் , தனது அருகில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தை மற்றும் மாணவியை மீட்ட பெற்றோர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் மாணவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் மாணவி செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கர்ப்பிணி மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து அங்கேயே இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.