லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காவல் துறையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரியில் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வருவதை தெரிந்து கொண்ட விவசாயிகள், அவருக்கு கறுப்புக்கொடி காட்ட முற்பட்டனர். அப்போது அவர்கள் மீது பாஜகவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் 4 பாஜவினர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராக்கு தொடர்பு உள்ளதாக சொல்லப்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஆஷிஷ் மிஸ்ரா இருந்த வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்ததுடன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த விவகாரம் குறித்து ஆஜராக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நேற்றிரவு 9 மணிக்கு ஆசிஷ் மிஸ்ரா நேரில் ஆஜரான நிலையில் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதில் அவர் உரிய பதிலை அளிக்காததால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவர் கைது செய்யப்பட்டார்.