வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பயனாளிகள் பெரிதும் தவித்தனர். இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதை சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. பயனாளிகள் யாரும் இவற்றில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.
பேஸ்புக்கில் ‘தொழில்நுட்ப கோளாறால் மன்னிக்கவும்’ என தகவல்கள் வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த சமூக வலைதளங்களால் முடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல முறை இந்த சமூக வலைதளங்கள் முடங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக மட்டுமே பேஸ்புக் நிறுவனம் கூறி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்புக் முடங்கியது குறித்து டிவிட்டரில் பல பயனாளிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.