மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் தமிழக அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தடைப்படும் என்றும் இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ,கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத கர்நாடக முதல்வர் எடியூரப்பா காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என உறுதிபடக் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று சந்தித்தார். நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் திங்கட்கிழமை அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேற்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ஒரு மாநிலத்தின் திட்டத்தால் மற்ற மாநிலங்களுக்கு பிரச்னை வருமானால் அதை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றத்திற்கு இணையாக இந்த விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.