கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் யாவரும் அறிவர். ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமலும் மருந்துகள் கிடைக்காமலும் அல்லல்பட்டன. அதேபோல இறந்தவர்களைக் கூட நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு இடுகாடுகள் நிரம்பி வழிந்தன. இந்தப் பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். இச்சூழலில் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் பெயரளவில் தான் ஊரடங்கு அமலில் இருக்கின்றன.
அதிகப்படியான தளர்வுகள் கொடுத்ததால் மக்கள் இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதாக எண்ணி சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அதாவது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல மாஸ்க் அணியாமல் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். சமூக இடைவெளியை கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள். அந்தளவிற்கு கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை மறந்து சுற்றிவருகின்றனர். தற்போது சுற்றுலாதலங்களும் திறக்கப்பட்டுவிட்டதால் அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும் அசாம், மிசோரம்,நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் பேசினார். அப்போது மலைப் பிரதேசங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது கவலையளிப்பதாக தெரிவித்த அவர், விதிகளைப் பின்பற்றாமல் கொரோனா அலைகள் நாம் தான் உருவாக்குகிறோம் என்றார். அதேபோல சுகாதார துறைக்கான நிதி ஆயோக் தலைவர் விகே பாலும், மக்கள் 3ஆம் அலைக்கான எச்சரிக்கையை மக்கள் வானிலை அறிக்கையைப் போல் அணுகுவதாக வேதனை தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கமோ எப்போது வேண்டுமானாலும் 3ஆம் அலை வரும் என்று எச்சரித்துள்ளது.
ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் விதிகளைப் பின்பற்றாமல் மக்கள் சுற்றிவருகின்றனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் கொரோனா 3ஆம் அலை உருவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எங்கு கொரோனா அதிகரித்தாலும் அதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு
ஆகவே மக்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுங்கள். நீங்கள் சொல்லியும் கேட்கவில்லையென்றால் தண்டனையாக அதிகமாக கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரியுங்கள். ஊரடங்கு போடக்கூட தயாங்காதீர்கள். யார் விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டாலும் அவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுங்கள். இன்னும் இரண்டாம் அலை ஓயவில்லை என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.