தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னையில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சுமார் 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தடையை மீறி வெளியே சென்ற வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சென்னையில் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், முற்றிலுமாக பாதிப்பு குறைய வில்லை. இத்தகைய சூழலில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
முழு ஊரடங்கை கண்காணிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையர், ட்ரோன்கள் மூலம் ஊரடங்கை கண்காணிக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், தடைகளை மீறி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அந்த வாகனங்கள் ஊரடங்கு முடிந்தவுடன் நீதிமன்றங்களில் சென்றே பெறவேண்டும் என்றும் தெரிவித்ததோடு மக்கள் முழு ஊரடங்கை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.