அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ தேவைகளுக்கு, விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அதன்படி சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோரை எச்சரித்து காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.