வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. அதைப்போல மீண்டும் ஒரு பாதிப்பு, வருகிற வாரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதாவது நாளை மறுநாள் (27-ந் தேதி) மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறக்காது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை வட மாநிலங்களில் ‘ஹோலி’ விடுமுறை. இப்படி தொடர்ந்து 3 நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இடையில் மார்ச் 30-ந் தேதி வேலைநாளாக உள்ளது. 31-ந் தேதி வேலைநாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இதைப்போல அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1-ந் தேதி வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதாலும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். 3-ந் தேதி வங்கிகள் திறக்கும். ஆனால் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும்.
இப்படி அடுத்தடுத்து விடுமுறை ஆவதால் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே ஆலோசனை செய்து வங்கி தேவைகளை உரிய நாளில் நிறைவேற்றிக்கொள்வதும், வங்கி திறக்காத நாட்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதும் நல்லது என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.