இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்கள் இடம் பெயர்ந்து கடல் வழியாக தமிழகம் வருகின்றனர். இதுவரை 150-க்கும் மேற்பட்ட அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடி அருகே 5-வது மணல் திட்டு பகுதியில் 2 நாட்களாக தவித்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் 5 பேர் மீட்கப்பட்டனர். இதில் கணவன்-மனைவி, அவர்களின் 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் கூறும்போது, தங்களுடன் வந்த ஒரு வாலிபர் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் கடலில் குதித்து விட்டதாக தெரிவித்தனர். அவர் என்ன ஆனார்? என்பது குறித்து கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலில் ரோந்து சென்று அவரை தேடினர்.
இந்த நிலையில் கடலில் குதித்து தப்பிய வாலிபர் நேற்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்தார். அவரிடம் மண்டபம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா மற்றும் கடலோர காவல்படை போலீசார்,
மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். எனது பெயர் ஹசன்கான் (வயது 24). எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கி உள்ளனர். நான் கடந்த 2020-ம் ஆண்டு இலங்கைக்கு சென்று அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தேன்.
தற்போது அங்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 5-ந்தேதி இரவு மன்னார் தாழ்வாடி பகுதியில் இருந்து 5 பேருடன் தனுஷ்கோடிக்கு புறப்பட்ட ஒரு பிளாஸ்டி படகில் நானும் அனுமதி பெற்று அவர்களுடன் வந்தேன்.
6-ந்தேதி இலங்கை கடற்படை எங்களை பார்த்து விட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அச்சம் அடைந்த நான் 5-வது மணல் திட்டு பகுதியில் கடலில் குதித்து நீந்தி அன்று மாலை 6 மணிக்கு அரிச்சல்முனை பகுதியில் கரையேறினேன். பின்னர் திருப்புல்லாணி அருேக குத்துக்கல்வலசை பகுதியில் வசித்து வரும் எனது தாத்தா வீட்டுக்கு சென்று விட்டேன்.
என்னை போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் மண்டபம் முகாமுக்கு நானே வந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையான தகவலா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மண்டபம் அகதிகள் முாமில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.