சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி அன்று வெளியாகிறது. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கடலூர் பகுதியில் உள்ள நான்கு திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நான்கு திரையரங்கிலும் ரசிகர்கள் காட்சிகள் வெளியிட வேண்டுமென்று என்றும், அந்த காட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால், கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரசிகர்களும் டிக்கெட் வாங்க குவிந்துள்ளனர். அப்போது விஜய் ரசிகர்கள் சார்பில் ரசிகர் ஸ்பெஷல் காட்சி டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு தியேட்டர் சார்பில் டிக்கெட் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் திடீரென்று கடலூர் - புதுவை சாலையான பாரதி சாலையில் திரையரங்கத்திற்கு முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் விரைந்து வந்து விஜய் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர் போலீசார்.
மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வேறு ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.