சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர், சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த காவல்துறையினர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்ததுடன், அவர் எடுத்து வந்த சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் மாணவருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியக்கூடாது என்பதற்காக காவல் நிலையித்தில் சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல் நிலையம் சென்று கூறியபோது, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில், கொடுங்கையூர் தலைமைக்காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர் அப்துல் ரஹீமை தாக்கியதாக காவல்நிலைய ஆய்வாளர் நசீமா உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் மாணவன் ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகள் நேற்று வெளியான நிலையில் இன்று 9 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.